பிரளய காலத்தில் அமிர்த குடம் இத்தலத்தில் வந்து தங்கியமையால் 'திருக்குடந்தை' என்று பெயர் பெற்றது. திருமகள் ஹேம மகரிஷியின் மகளாக இத்தலத்தில் அவதரித்து பெருமாளை நோக்கி தவம் செய்து திருமணம் செய்துக் கொண்டார். பெருமாள் 'சாரங்கம்' எனும் வில்லை ஏந்தி முனிவருக்குக் காட்சி கொடுத்ததால் 'சாரங்கபாணி' என்னும் திருநாமம்.
மூலவர் சாரங்கபாணி, ஆராவமுதன் என்னும் திருநாமங்களுடன் ஆதிசேஷ சயனத் திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். தாயாருக்கு கோமளவல்லி, படிதாண்டாப்பத்தினி என்னும் இரண்டு திருநாமங்கள். ஹேம மகரிஷிக்கு பகவான் பிரத்யக்ஷம். இக்கோயிலில் மூலவர் சந்நிதி தேர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலுக்கு அருகில் சக்ரபாணி கோயில் உள்ளது. இவரும், சாரங்கபாணியும் அண்ணன் தம்பிகளாக கருதப்பட்டு பல உத்ஸவங்கள் நடைபெறுகின்றன. இக்கோயிலுக்கு அருகில் உள்ள இராமசுவாமி கோயிலில் இராமாயணக் காட்சிகள் வண்ணத்தால் அருமையாக வரையப்பட்டுள்ளன.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நவக்கிரகங்களுள் ஒருவரான குரு சிம்ம ராசியில் மகம் நட்சத்திற்கு வரும்போது மகாமகம் சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது பெருமாள் மகாகமகக் குளத்திற்கு தீர்த்தவாரிக்கு எழுந்தருளி காட்சி தருவதைப் பல இலட்சம் பேர் வந்து தரிசனம் செய்வார்கள்.
இத்தலத்தில்தான் ஸ்ரீமந்நாத முனிகள் "ஆராவமுதே" என்று தொடங்கும் திருவாய்மொழியைக் கேட்டு, திவ்ய பிரபந்தத்தையே தொகுக்க ஆரம்பித்தார்.
பெரியாழ்வார் 3 பாசுரங்களும், ஆண்டாள் 1 பாசுரமும், திருமழிசையாழ்வார் 7 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 25 பாசுரங்களும், பூதத்தாழ்வார் 2 பாசுரங்களும், பேயாழ்வார் 2 பாசுரங்களும், நம்மாழ்வார் 11 பாசுரங்களுமாக மொத்தம் 51 பாசுரங்கள் பாடியுள்ளனர்.
இக்கோயில் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|